தேசிய செய்திகள்

லஞ்சம் வாங்கியபோது சுற்றி வளைப்பு.. சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய போலீஸ் துணை சூப்பிரண்டு கைது

வாகனத்தை விடுவிக்க உரிமையாளரிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரூ.2 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

ஆலப்புழா,

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலையில் துணை போலீஸ் சூப்பி ரண்டாக பணியாற்றி வந்தவர் அனில்குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் நடத்திய சோதனையில் மனித கழிவுகளை அகற்றும் ஒரு வாகனத்தை பறிமுதல் செய்திருந்தார். மேலும் அந்த வாகனத்தை விடுவிக்க உரிமையாளரிடம் அனில்குமார் ரூ.2 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத வாகன உரிமையாளர், போலீஸ் அதிகாரிக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவெடுத்தார். இதற்காக லஞ்ச ஒழிப்புதுறை போலீசாரிடம் ரகசியமாக புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் அதிகாரி அனில்குமாரை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி, வாகன உரிமையாளர் முதல் தவணையாக ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் நோட்டுகளை அனில்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று கொடுத்தார். அப்போது வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பென்னி தலைமையிலான போலீசார் அதிரடியாக அவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அனில்குமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கிருந்து ஓடி சுற்றுச்சுவரை தாண்டி குதித்தார். ஆனால் போலீசார் அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக போலீஸ் துணை சூப்பிரண்டு சிக்கிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.