மும்பை
விசாரணை என்ற பெயரில் பெண்ணின் படுக்கை அறைக்குள் போலீசார் நுழைந்தது தனிமனித உரிமை மீறல் என ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.
மராட்டிய மாநிலம், நாக்பூர் சாவ்னெர் பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கார் விபத்து வழக்கு ஒன்றில் விசாரணை நடத்துவதற்காக போலீசார் எனது வீட்டுக்கு வந்தனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் எனது படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்தனர். என்னையும் எனது கணவரையும் மிரட்டும் தொனியில் விசாரித்ததோடு, எனது செல்போனையும் சட்டவிரோதமாக பறிமுதல் செய்து 2 நாட்கள் வைத்திருக்கிறார்கள்.
இந்த வழக்கில் எனக்கோ, எனது கணவருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. எங்களை குற்றவாளிகளாகவும் சேர்க்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஊர்மிளா ஜோஷி பால்கே, நிவேதிதா மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணை என்ற பெயரில் ஒரு குடிமகனின் வீட்டிற்குள், குறிப்பாக ஒரு பெண்ணின் படுக்கையறைக்குள் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் போலீசார் அத்துமீறி நுழைந்து செல்போனை பறிமுதல் செய்தது அந்தப்பெண்ணின் கண்ணியத்தையும், தனிமனித உரிமையையும் கடுமையாக பாதித்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21-ன் படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரம் மற்றும் வாழும் உரிமையை யாராலும் பறிக்க முடியாது.
விசாரணையை காரணம் காட்டி சட்டத்தை மீறி செயல்பட போலீசாருக்கு உரிமை இல்லை. புலனாய்வு அமைப்புகள் எப்போதும் சட்ட வரம்பிற்குள் மட்டுமே செயல்பட வேண்டும். எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மராட்டிய அரசு 2 மாதத்திற்குள் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த தொகையை, தவறு செய்த சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் இருந்து அரசு நேரடியாக வசூலித்து கொள்ள வேண்டும். பணத்தால் இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முடியாது என்றாலும், இது அந்தப்பெண்ணுக்கு ஒரு ஆறுதலாகவும், போலீசார் சட்டப்படிதான் நடக்கவேண்டும் என்பதற்கான நினைவூட்டலாகவும் இது அமையும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.