பீகார் குழந்தைகள் நலத்துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை கோர்ட்டு அவரை விடுவித்த நிலையில், ஐகோர்ட்டு அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அந்த பெண் அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் விஸ்வநாதன் அமர்வு விசாரித்து வருகிறது. இதில் அவரது தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதிகள், ஜாமீனும் வழங்கினர்.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லஞ்சப்பணத்தை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த போது எலிகள் தின்று அழித்து விட்டதாக போலீசார் தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நீதிபதிகள் கடும் அதிர்ச்சி வெளியிட்டனர்.
இதனை புறக்கணிக்க முடியாது எனக் கூறிய அவர்கள், அது குறித்து விசாரிக்கப்படும் என உறுதியாக தெரிவித்தனர். மேலும் அவர்கள், “எலிகள் மற்றும் பூச்சிகளால் ரூபாய் நோட்டுகள் அழிக்கப்பட்டது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படாததால், இவ்வகையான குற்றங்களில் மீட்கப்படும் இதுபோன்ற எத்தனை ரூபாய் நோட்டுகள் அழிக்கப்படுகின்றனவோ என எண்ணத் தோன்றுகிறது. இது மாநில அரசுக்கு ஒரு பெரிய வருவாய் இழப்பாகும்” என வேதனை தெரிவித்தனர்.
பின்னர் இந்த நோட்டுகள் அழிக்கப்பட்டதற்காக அளிக்கப்பட்ட விளக்கமும் ஏற்கத்தக்கதல்ல எனக் கூறிய அவர்கள், அது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து வழக்கை தள்ளிவைத்தனர்.