திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையில், டி.ஜே. பார்ட்டி என்ற போர்வையில் போதைப்பொருள் பயன்படுத்துவதும், கடத்தலும் மாநிலத்தில் பெருமளவில் நடைபெறுவதாக போலீசார் கருதுகின்றனர். மேலும், இது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால் இரவு 11 மணிக்கு மேல் இதுபோன்ற விருந்துகளுக்கு தடை விதித்தனர்.
போலீசாரின் இந்த முடிவுக்கு கேரளாவில் உள்ள பல்வேறு ஓட்டல்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஓட்டல் உரிமையாளர்கள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி முரளி புருஷோத்தமன் விசாரித்து, போலீசாரின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தார்.இதற்கிடையே, கோவளத்தில் உள்ள 5 நட்சத்திர பார்ஓட்டல்களில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் டி.ஜே. பார்ட்டிகள் மற்றும் பிற கொண்டாட்டங்கள் நடத்த எந்த தடையும் இல்லை.
கேரள சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற இந்த ஓட்டல்களின் செயல்பாடுகளை போலீசார் தடுக்கக்கூடாது. அதற்கு போலீசாருக்கு அதிகாரம் கிடையாது. செயல்பாட்டு நேரங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றால், அரசு ஒரு புதிய சட்டத்தையோ அல்லது விதியையோ வகுக்க வேண்டும். அந்த விதி அமலுக்கு வந்த பின்னரே போலீசார் இதில் தலையிட முடியும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. குற்றங்கள் அதிகரித்து வந்தால், நிறுவனங்களின் செயல்பாடுகளை மூடுவதற்கு பதிலாக அந்த குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.