தேசிய செய்திகள்

மது போதையில் அரசு பஸ்சை ஓட்ட முயன்ற போலீஸ்காரர் கைது

போலீஸ்காரர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவையொட்டி பத்தனம் திட்டா பஸ் நிலையத்தில் ஒரு அரசு பஸ் பம்பைக்கு புறப்பட தயாராக நின்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது ஆயூரை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் மனோஜ்குமார் (36) அந்த அரசு பஸ்சில் ஏறினார்.

பஸ்சில் டிரைவர் இல்லாததை பார்த்த மனோஜ் குமார் நேராக டிரைவர் இருக்கைக்கு சென்று பஸ்சை இயக்கி ஓட்டி செல்ல முயன்றார். இதைபார்த்த பயணிகள் கூச்சலிட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மனோஜ்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.