காவல்துறை அதிகாரி கைது 
தேசிய செய்திகள்

காவல் நிலையத்திற்குள் ஒப்படைக்கப்பட்ட மொபைல் போனைத் திருடி விற்ற போலீஸ் அதிகாரி கைது

பிஜு போனில் இருந்த சிம் கார்டை உடைத்து காவல் நிலையத்திற்கு பின்னால் வீசிவிட்டு, மறுநாள் அந்த போனை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வெறும் ரூ.1500-க்கு விற்றுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், காவல் நிலையத்திற்குள் ஒப்படைக்கப்பட்ட மொபைல் போனைத் திருடி விற்ற மூத்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சாலையில் கிடைத்த போன்

புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் கடந்த 8-ம் தேதி அன்று கேரள மாநிலம் திருக்கரிப்பூர் பகுதியில் சாலையில் ரூ.10,000 மதிப்புள்ள ரெட்மி மொபைல் போன் ஒன்றை கண்டெடுத்தார். இதையடுத்து அந்த போனை காசர்கோடு மாவட்டம் சந்தேரா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அன்று பணியில் இருந்த மூத்த சிவில் போலீஸ் அதிகாரி பிஜு (வயது 41), போனைப் பெற்றுக்கொண்டு காவல் நிலையப் பதிவேட்டில் முறைப்படி பதிவு செய்து பாதுகாப்பாக வைத்துள்ளார்.

இரவு பணியில் திருட்டு

இதற்கிடையே, கடந்த 12-ம் தேதி அன்று இரவு 10 மணியளவில் காவல் நிலையப் பாதுகாப்புப் பணியில் இருந்த அதே போலீஸ் அதிகாரி, அந்த மொபைல் போனை ரகசியமாக திருடியுள்ளார். மேலும், போனில் இருந்த சிம் கார்டை உடைத்து காவல் நிலையத்திற்கு பின்னால் வீசிவிட்டு, மறுநாள் அந்த போனை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வெறும் ரூ.1500-க்கு விற்றுள்ளார்.

காட்டிக்கொடுத்த பதிவேடு

தொலைந்து போன போனின் உரிமையாளரான பெண்ணின் மகன், தனது தாயின் போனைத் தேடி சந்தேரா காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது காவல் நிலையப் பதிவேட்டை சரிபார்த்தபோது, அந்த போன் ஏற்கனவே அங்கு ஒப்படைக்கப்பட்டது உறுதியானது. ஆனால், காவல் நிலையத்தில் போன் இல்லாததால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

சிசிடிவி-யில் சிக்கிய அதிகாரி

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் (எஸ்பி) உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பிஜு போனைத் திருடுவது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 24-ம் தேதி அன்று பிஜுவிடமிருந்து போனை வாங்கிய முகமது ஆரிஸ் என்பவரிடமிருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

காவல்துறை அதிகாரி கைது

மேலும், நேற்று (செவ்வாய்க்கிழமை) அன்று அதிகாரி பிஜு மீது அதிகாரப்பூர்வமாக திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் உடைமைகளைப் பாதுகாக்க வேண்டிய காவல் நிலையத்திற்குள்ளேயே போலீஸ் அதிகாரி ஒருவர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT