பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று உணவு தசரா என்ற பெயரில் வாழைப்பழம், இட்லி சாப்பிடும் போட்டி நடந்தது.
சிவமொக்கா டவுனில் சிவப்பா நாயகா சர்க்கிளில் நடைபெற்ற இப்போட்டியில், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் என 30-க்கும் மேற்பட்டோர் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இதில் வெறும் 2 நிமிடங்களில் அதிகபட்ச இட்லிகளையும், வாழைப்பழங்களையும் சாப்பிடுபவருக்குப் பரிசு வழங்கப்படும் என்ற கடுமையான விதி விதிக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாழைப்பழம், இட்லிகளை ருசித்தனர். வாழைப்பழம் சாப்பிடும் போட்டி பெண்களுக்கும், இட்லிகளை சாப்பிடும் போட்டி பொதுமக்கள் என 2 பிரிவாக நடந்தது.
முடிவில் போக்குவரத்து போலீஸ்காரரான பிரவீன் பட்டீல் என்பவர் நிர்ணயிக்கப்பட்ட 2 நிமிடங்களில் 11½ இட்லியை சாப்பிட்டு முடித்து முதலிடத்தை பிடித்தார். அதுபோல் 2 நிமிடங்களில் 7½ வாழைப்பழங்களை சாப்பிட்டு எச்.சி.ராதா என்ற பெண் முதலிடத்தை பிடித்தார்.