தேசிய செய்திகள்

வங்கதேச கொள்ளை கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிசூடு: 6 பேர் கைது

இந்திய நகரங்களில் கொள்ளையடித்து விட்டு தங்கள் நாட்டுக்கு சென்று விடுவதை அவர்கள் வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

வங்காளதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இந்தியாவில் பல நகரங்களில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்தது. அந்த கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். அந்த கும்பல் தெற்கு டெல்லிக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டெல்லிக்குள் நுழைந்த வாகனங்களை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சராய் கலே கான் என்ற இடத்தில் ஒரு வாகனத்தில் வந்த ஆறு பேர் கும்பல் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடியது. அவர்களை விரட்டி சென்ற போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்தியா-வங்காளதேசம் எல்லை வழியே சட்ட விரோதமாக நுழைந்து இந்திய நகரங்களில் கொள்ளையடித்து விட்டு தங்கள் நாட்டுக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் வங்காளதேசத்தின் பகர்ஹத் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

இந்த கும்பல் மீது, 14க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவற்றில் பல டெல்லி, கோவா, கர்நாடகா மாநிலங்களில் பதிவானவை. இந்த கும்பலை சுட்டு பிடித்த போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர். காயமடைந்த கொள்ளையர்களில் சிலர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, ஆறு கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.