டேராடூன்,
உத்தரகாண்டில் போக்குவரத்து விதிகளை முற்றிலும் மீறி, சுமார் 100 ஹாரன்கள் பொருத்தப்பட்ட விசித்திரமான பைக் ஒன்றை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரை காலக்கட்டத்தில் ஹரித்துவாரில் உள்ள சங்கராச்சாரி சவுக் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காதை பிளக்கும் ஒலியுடன் வந்த ஒரு பைக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த பைக்கை சோதித்தபோது, அதன் முன்பக்கத்திலும் பக்கவாட்டிலும் அடுக்கடுக்காக 100 ஹாரன்கள் மற்றும் நார்த் விளக்குகள் பொருத்தப்பட்டு, முற்றிலும் உருமாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஒலி மாசு மற்றும் போக்குவரத்து விதிமீறல் காரணங்களுக்காக அந்த வாகனத்தை கான்கல் போலீசார் உடனடியாகப் பறிமுதல் செய்து, வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த பைக்கை போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலை பாதுகாப்பு விதிகளை மீறி இதுபோன்ற ஆபத்தான மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.