புதுடெல்லி,
லக்னோ பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ரூப் ரேகா வர்மா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், செயற்பாட்டாளர்கள் உள்பட 12 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், அரசியல் தலைவர்களின் பேச்சுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபல், அரசியல் சூழ்நிலை நச்சுத்தன்மை ஆகிவிட்டதாகவும், எந்த தனிநபரை பற்றியும் தான் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதை ஏற்கவில்லை. அவர் கூறியதாவது:- ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த குறிப்பிட்ட நபர்களை குறி வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டதுபோல் தோன்றுகிறது. இந்த மனுவை ஏற்க முடியாது. இதை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். என்னென்ன விதிமுறைகள் உள்ளன, அவை எப்படி மீறப்பட்டுள்ளன என்பது குறித்து ஒரு சாதாரண மனு தாக்கல் செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நீதிபதி பி.வி.நாகரத்னா, “அரசியல் தலைவர்கள் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். நாங்கள் வழிகாட்டுதல்கள் உருவாக்கினாலும் யார் அவற்றை பின்பற்றுவார்கள்?" என்று கூறினார். நீதிபதி ஜோய்மால்யா பக்சி, "நாங்கள் உத்தரவு பிறப்பிக்கலாம். அவற்றை அமல்படுத்துவதுதான் சவாலாக உள்ளது. வெறுப்பு பேச்சுகள், கருத்து சுதந்திரம் குறித்து ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளோம். அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது” என்று கூறினார்.