மும்பை,
மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள தாராகாவில், உள்ளூர் அணிகளுக்கு இடையேயான எம்.எல்.ஏ கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தை காணவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கவும் அந்த பகுதியை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களை அழைத்தனர்.
அப்போது, தாராகா நகராட்சி மன்ற தலைவருக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் முறையான அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அவர், போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போதே யாரும் எதிர்பாராத விதமாக, அங்கிருந்த ஒரு டிராக்டரை எடுத்துக்கொண்டு நேரடியாக ஆடுகளத்திற்குள் சென்ற அரசியல்வாதி, பிட்ச்சை உழுது முற்றிலும் சேதப்படுத்தினார்.
இதனால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மைதானத்தில் இருந்த வீரர்களும் ரசிகர்களும் இந்த செயலை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து புகார் எதுவும் வரவில்லை, எனவே வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
மைதானத்தில் டிராக்டரை விட்டு பிட்ச்சை நாசப்படுத்திய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.