புதுடெல்லி:
2027-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணியை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் வழக்கமான பணி, சிறப்பு தீவிர திருத்தப் பணியால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தகுதியுள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதே இந்த வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகளின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளம் வாக்காளர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களைப் பட்டியலில் இணைப்பதுடன், இரட்டைப் பதிவுகள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் இந்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.