வாகமன்,
பொன்னேரியை அடுத்த திருவேங்கடபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குருபிரசாத் (வயது20). பட்டதாரியான இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் 5 மோட்டார். சைக்கிள்களில் கடந்த வாரம் கேரளாவுக்கு சுற்றுலா சென்றார்.
அளைவரும் மோட்டார் சைக்கிளிலேயே அனைத்து பகுதிகளுக்கும் சென்றனர். அவர்கள் நேற்று மாலை வாகமன் பகுதியை சுற்றி பார்த்து விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தனர். திரும்பியபோது குருபிரசாத் மற்றும் அவரது நண்பர் விக்கி ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குருபிரசாத் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் விக்கிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவுக்கு சுற்றுலா சென்ற போது வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் அவரது நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சிலவருடங்களுக்கு முன்பு தந்தையை இழந்த குரு பிரசாத் சமீபத்தில்தான் சென்னையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்து உள்ளார். சில மாதமாக அவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் தனது பள்ளி, கல்லூரி மாண்வர்களுடன் கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றபோது விபத்தில் பலியாகி விட்டார்.
விபத்து நடப்பதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு அவர் தனது தாய் மணிமொழி மற்றும் 2 தங்கையிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டதாக தெரிவித்து உள்ளார். அப்போது உங்களுக்கு பிடித்த கேரளா சாக்லேட் வாங்கிக் கொண்டு வருவதாகவும் தெரிவித்து இருக்கிறார். ஆனால் சிறிது நேரத்திலேயே குருபிரசாத் விபத்தில் பலியான தகவல் கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி துடித்தனர்.