புதுடெல்லி,
காஷ்மீர் பஹல்காமில், 26 பேரை பயங்கரவாதிகள் கடந்த மாதம் 26-ந் தேதி சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி தரும் வகையில், இந்தியா 7-ந் தேதி நள்ளிரவு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் இந்த துல்லிய தாக்குதலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இந்த தாக்குதலோடு, இந்தியா நிறுத்தி கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா விடவில்லை. நேற்றும், பாகிஸ்தான் மீது டிரோன் தாக்குதலை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து உள்ளது.
இந்தநிலையில், அரியானா மாநிலத்தில் இன்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப்படலாம் என பொதுமக்களுக்கு இந்திய உளவுப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை முழு மின்தடை அமலில் இருக்கும் என்றும், பொதுமக்கள் வீடுகள், வணிக நிறுவனங்கள், மின்விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. உளவுப்பிரிவின் எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.