கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கர்ப்பத்தில் சந்தேகம்.. டிஎன்ஏ சோதனைக்கு கணவன் வற்புறுத்தல்... மனைவி எடுத்த விபரீத முடிவு

அபிலாஷின் மனைவி சுஷ்மிதா 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தார்.

ஐதராபாத்,

கர்ப்பத்தில் சந்தேகமடைந்த கணவன், டிஎன்ஏ பரிசோதனை செய்ய வற்புறுத்தியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள காடிபெட்டப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அபிலாஷ். இவருடைய மனைவி சுஷ்மிதா (வயது 25). இவர்களுக்கு கடந்த 18 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சுஷ்மிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கர்ப்பத்தில் சந்தேகம்

ஆனால் இதில் சிறிதும் மகிழ்ச்சியடையாத அபிலாஷ் மற்றும் அவரது தாயார் ஆகியோர் சுஷ்மிதாவின் நடத்தையில் சந்தேகமடைந்தனர். கருவில் உள்ள குழந்தையின் தந்தை குறித்த சந்தேகம் எழுந்ததால், டிஎன்ஏ பரிசோதனை செய்ய விரும்பினார்.

அதன்படி வயிற்றில் உள்ள குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு சுஷ்மிதாவை வற்புறுத்தியுள்ளனர்.

அவமானம்

ஆனால் இதில் சுஷ்மிதாவிற்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. இதனால் அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

சுஷ்மிதாவின் வளைகாப்பு விழா குறித்துப் பேச அவரது பெற்றோர் வந்திருந்தபோதும் இந்த விவகாரம் வெடித்தது. டி.என்.ஏ. பரிசோதனை செய்யும்படி இரு குடும்பத்தார் முன்னிலையிலும் அபிலாஷ் தகராறு செய்துள்ளார். அபிலாஷ் தன்னை குடும்பத்தினர் முன்னிலையில் அவமானப்படுத்தியதால் சுஷ்மிதா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

தற்கொலை

இதனால் கடந்த வியாழக்கிழமை அன்று சுஷ்மிதா தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுஷ்மிதாவின் தாயார் ஜனாபாய் அங்குள்ள போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று சுஷ்மிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தனது மகளை அவரது கணவர் மற்றும் மாமியார் தொடர்ந்து துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஜனா பாய் குற்றம் சாட்டியுள்ளார்.

கைது

எனவே கணவர் மற்றும் மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தான் சுஷ்மிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அபிலாஷ் மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்தனர். கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.