தேசிய செய்திகள்

பிரீமியம் பெட்ரோல் விலை அதிரடியாக உயர்வு-வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

ஈரான் - அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால் சர்வதேச அளவில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்குகளில் பிரீமியம் பெட்ரோலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பெட்ரோல் வாகன இன்ஜின்களின் அதிவேக செயல்பாட்டுக்கு பயன்படுவதோடு, எரிசக்தி சேமிப்பாகவும் திகழ்கிறது. அத்துடன், வாகன இன்ஜின்கள் மென்மையான செயல்பாட்டுக்கு உதவுவதோடு, இன்ஜின்களில் படியும் கார்பன் துகள்களை அகற்றி அவற்றின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. மேலும், வாகன புகையைக் குறைத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இந்த வகை பெட்ரோலை சில வாகன ஓட்டிகள் விரும்பி தங்கள் வாகனங்களுக்கு நிரப்புவதை காண முடிகிறது.

ஈரான் - அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால் சர்வதேச அளவில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சீனா, பிலிப்பைன்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இதுவரை உயர்த்தப்படவில்லை.இந்த நிலையில், பிரீமியம் பெட்ரோல் விலை ரூ.2.35 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சாதாரண பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக எச்.பி.சி.எல் நிறுவனம் டீலர்களுக்கு அறிக்கை வாயிலாக தெரியப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில பெட்ரோல் பம்ப் சங்க தலைவர் அர்ஷ்விந்தர் மோங்கியோ கூறும்போது, பிரீமியம் பெட்ரோல் தற்போது 105.16க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இனி 107.13 ஆக விற்பனை செய்யப்படும் என்றார். பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வு வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.