தேசிய செய்திகள்

3 நாள் அரசுமுறை பயணமாகச் சிக்கிம் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சிக்கிம் மாநில அரசு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அம்மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேங்டாக்,

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகச் இன்று சிக்கிம் மாநிலத்திற்குச் சென்றடைந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் இந்திய-சீன எல்லைப் பகுதிக்குச் செல்லவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் சுமார் 12 மணியளவில் லிபிங் ஹெலிபேடில் வந்து இறங்கிய குடியரசுத் தலைவரை, சிக்கிம் மாநில கவர்னர் ஓம் பிரகாஷ் மாத்தூர் மற்றும் முதல் மந்திரி பிரேம் சிங் தமாங் ஆகியோர் வரவேற்றனர். வரவேற்பைத் தொடர்ந்து, தனது பயணத்தின் போது தங்குவதற்காக 'லோக் பவன்' ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.

முக்கிய நிகழ்வுகள்

முதல் நாள்: கேங்டாக்கில் உள்ள ரிட்ஜ் பூங்காவில் பெண்களுக்கான வாகனங்களான 'பிங்க் சிட்டி ரன்னர்ஸ்' சேவையைக் குடியரசுத் தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மேலும், அங்குள்ள ஆர்க்கிடேரியம் (மலர்த்தோட்டம்) மற்றும் நம்கியால் திபெத்தியல் நிறுவனம் ஆகியவற்றிற்கு செல்ல உள்ளார்.

இரண்டாம் நாள்: இந்திய-சீன எல்லையில் உள்ள நாது லா கணவாய் பகுதிக்கு ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து, கேங்டாக்கில் உள்ள மனன் பவனில் நடைபெறும் சிக்கிம் பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.

மூன்றாம் நாள்: தனது பயணத்தின் இறுதி நாளான மே 28 அன்று, பால்ஜோர் மைதானத்தில் நடைபெறும் விழாவில் சிக்கிம் காவல்துறைக்கு ஜனாதிபதி 'காவல்துறை வண்ண விருது' வழங்கிச் சிறப்பிக்கிறார். மேலும், அங்கு நடைபெறும் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிடுகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டுச் சிக்கிம் மாநில அரசு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.