தேசிய செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் ஐ.நா. பொது செயலாளர் சந்திப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஐ.நா. பொது சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மனித இனம் முழுமைக்கும் சேவை செய்யும் வகையில், உலகளாவிய அறிவியல் குழுவை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் உருவாக்க வேண்டும் என்ற குட்டெரெசின் திட்ட நடவடிக்கையை ஜனாதிபதி முர்மு வரவேற்றார்.

இதேபோன்று, ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை நடத்தி அதில் வெற்றியடைந்ததற்காக மற்றும் பல்வேறு துறைகளில் ஐ.நா. அமைப்புடன் நீண்டகாலம் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதற்காகவும் இந்தியாவின் தலைமையை குட்டெரெஸ் பாராட்டினார்.

உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் சூழலில் பரவலாக நம்பிக்கையில் பற்றாக்குறை காணப்படுவது உள்பட, பன்முக தன்மையானது பெரிய அளவில் சவால்களை சந்தித்து வருகிறது என முர்மு கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், அதுவே ஐ.நா. பொது சபையை தொடர்புடைய மற்றும் ஐ.நா. பொது சபை திறமையாக செயல்படவும் அவசியம் என கூறினார். பன்முக தன்மைக்கு இந்தியாவின் முழு ஆதரவும் அளிக்கப்படும் என அப்போது அவர் மீண்டும் வலியுறுத்தினார்.