அமராவதி,
ஆந்திர பிரதேசத்தில் உள்ள 2 பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொள்ள உள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் 30(நாளை) பிற்பகல் 1 மணியளவில், விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆந்திர பிரதேச மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
பின்னர் பெங்களூரு புறப்பட்டு செல்லும் ஜனாதிபதி, அங்குள்ள கவர்னர் மாளிகையில் இரவு தங்குவார். தொடர்ந்து ஜூலை 1-ந்தேதி(புதன்கிழமை) பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்திற்கு ஜனாதிபதி செல்ல உள்ளார்.
அன்றைய தினம் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அனந்தபுரத்தில் உள்ள ஆந்திர பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.
தொடர்ந்து, மாலை 4 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்திற்கு திரும்பும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்று, மாலை 4.25 மணிக்குள் டெல்லி ஜனாதிபதி மாளிகைக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.