தேசிய செய்திகள்

ஆந்திரா: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி முர்மு பங்கேற்பு

ஜனாதிபதி முர்முவின் வருகையையொட்டி ஆந்திராவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமராவதி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் பயணமாக ஆந்திர மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

பட்டமளிப்பு விழா

டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஆந்திரா சென்ற திரவுபதி முர்மு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரபிரதேச மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி முர்மு, மாணவ-மாணவியருக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சி மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது.

இதையடுத்து, ஆந்திராவில் இருந்து கர்நாடகா செல்லும் ஜனாதிபதி முர்மு பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார். இதனை தொடர்ந்து நாளை மீண்டும் ஆந்திரா செல்லும் ஜனாதிபதி முர்மு அனந்தபூரில் உள்ள ஆந்திரபிரதேச மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.

இதனை தொடர்ந்து நாளை மதியம் பெங்களூரு செல்லும் முர்மு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். ஜனாதிபதி முர்முவின் வருகையையொட்டி ஆந்திராவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.