ஜனாதிபதி திரவுபதி முர்மு  
தேசிய செய்திகள்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது ஆசிரியர்களின் கடமையாகும் என்று ஜனாபதி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

"ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள நமது ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஆசிரியர் தினம், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், சிறந்த கல்வியாளரும் தத்துவஞானியுமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. அவர் ஒரு மிகச்சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தார். இந்த வேளையில், அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

உத்வேகம்

ஆசிரியர்கள், தங்கள் வழிகாட்டுதல், அறிவுரைகள் மூலம், மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் குணநலன்களை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது அவர்களின் கடமையாகும்.

அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட ஓர் ஆசிரியர், மாணவர்களின் தனித்துவமான ஆற்றலை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாக திகழ்ந்து, சிறந்து விளங்க அவர்களை ஊக்குவிப்பார்.

தேடல் மனப்பான்மை

ஆசிரியர்கள் தங்கள் அறிவை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, புதுமையான கற்பித்தல் முறைகளை கையாள வேண்டும். அவர்கள் மாணவர்களிடையே சுயசிந்தனையை ஊக்குவித்து, தேடல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

நன்றி

அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அனைத்து ஆசிரியர்களும், தேசத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் அறிவொளி பெற்ற தலைமுறைகளை உருவாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT