தேசிய செய்திகள்

‘வந்தே மாதரம்’ மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை

டெல்லி செங்கோட்டையில் 15-ந் தேதி பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றுகிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'வந்தே மாதரம்' பாட லுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அந்த பாடலை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

தேசிய கீதம்

தேசிய கவுரவ சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம், தேசிய கீதத்துக்கு (ஜன கண மன) சட்ட பாதுகாப்பு அளித்து வருகிறது. தேசிய கீதம் பாடுவதை உள்நோக்கத்துடன் தடுத்தாலோ, கூட்டத்தில் பாடும்போது இடையூறு விளைவித்தாலோ அது குற்றமாக கருதப்படும். அதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். 2-வது அல்லது அடுத்தடுத்த குற்ற நிரூபணங்களுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

ஜனாதிபதி ஒப்புதல்

இதற்கிடையே, 'வந்தே மாதரம்' என்ற தேசிய பாடலுக்கும் தேசிய கீதத்துக்கு சமமான சட்ட பாதுகாப்பு அளிப்பதற்காக தேசிய கவுரவ சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. அந்த மசோதா, கடந்த மாதம் 29-ந் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையிலும், 30-ந் தேதி மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், 'வந்தே மாதரம்' மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் மூலம், அம்மசோதா, சட்ட வடிவம் பெற்றுள்ளது.

3 ஆண்டுகள் சிறை தண்டனை

இதன்படி, வந்தே மாதரம் பாடுவதை உள்நோக்கத்துடன் தடுத்தாலோ, அப்பாடலை கூட்டத்தில் பாடும்போது இடையூறு விளைவித்தாலோ 3 ஆண்டுகள்வரை சிறை தண்டனை அல் லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இம்மாதம் 15-ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றும்போது முதல்முறையாக 'வந்தே மாதரம்' பாடல் பாடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே கூறியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், தேசிய கீதமும், தேசிய பாடலும் பாடப்படும் அரசு நிகழ்ச்சிகளில், முதலில், தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் அனைத்து 6 சரணங்களும் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும். அப்பாடலை பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் தேசிய பாடல் பாடுவதுடன் அன்றைய பணிகளை தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.