புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இணை மந்திரியாக இருந்தவர் எல்.முருகன். தமிழகத்தைச் சேர்ந்தவரான எல்.முருகன், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி முதல் முறையாக மத்திய மந்திரியானார். அப்போது அவருக்கு தகவல்-ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது.
2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, 3-வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றபோதும், எல்.முருகனுக்கு இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த முறை தகவல்-ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டது. அவர் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இருமுறை தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்தநிலையில் எல்.முருகன், கடந்த 13 ஆம் தேதி தனது, மந்திரி பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். மேலும் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்தும் விலகினார்.தனது ராஜினாமா தொடர்பாக பிரதமர் மோடிக்கு, அவர் 5 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், எல் முருகனின் ராஜினமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது பிரிவு (2)-ன் கீழ், பிரதமரின் பரிந்துரையின்பேரில் எல். முருகனின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.