தேசிய செய்திகள்

ஆந்திரா: கனக துர்கை அம்மன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் பயணமாக இன்று ஆந்திரா சென்றுள்ளார்.

அமராவதி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஜனாதிபதி முர்மு ஆந்திரா பயணம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் பயணமாக இன்று ஆந்திரா சென்றுள்ளார். டெல்லியில் இருந்து நாளை மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் புறப்படும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மாலை 6.30 மணியளவில் ஆந்திரா சென்றார்.

கனக துர்கை அம்மன் கோவிலில் வழிபாடு

பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர் விஜயவாடாவில் உள்ள இந்து மதக்கடவுளான கனக துர்கை அம்மன் கோவிலுக்கு சென்றார். கனக துர்கை அம்மன் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். ஜனாதிபதி முர்முவின் வருகையையொட்டி கனக துர்கை அம்மன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை காலை விஜயவாடாவில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஆந்திர அரசு சார்பில் நடைபெறும் கிராமப்புற பெண் கைவினை கலைஞர்களுக்கு வாய்ப்புகளையும், கைவினைப்பொருட்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் சரஸ் ஆஜீவிகா மேளாவில் ஜனாதிபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

இதையடுத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களின் பிரதிநிதிகளுடனும் முர்மு கலந்துரையாடுகிறார். இதனை தொடர்ந்து ஆந்திர பயணத்தை நிறைவு செய்யும் ஜனாதிபதி முர்மு நாளை மாலை 3 மணியளவில் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

SCROLL FOR NEXT