தேசிய செய்திகள்

வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தசரா கொண்டாட்டங்களில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி பங்கேற்பு

விழாவில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதர் ஆகியோரின் 90 அடி உயர உருவ பொம்மைகள் இடம்பெற்றிருந்தன.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவுடன் இணைந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) துவாரகா ஸ்ரீ ராம் லீலாவில் நடைபெற்ற தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி இந்திரபிரஸ்தா ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

ஜனாதிபதி, பிரதமர்

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், டெல்லி துணைநிலை கவர்னர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் சாந்தினி சவுக் நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் செங்கோட்டைக்கு அருகிலுள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற லவ் குஷ் ராம் லீலா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.

துவாரகாவில் நடைபெற்ற கொண்டாட்டங்களில், முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் அமைச்சரவை அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆகியோருடன் ஜனாதிபதி முர்முவும் கலந்துகொண்டார். அங்கு அவர் ராவணனின் உருவ பொம்மையை எரித்தார்.

உருவ பொம்மை எரிப்பு

கூட்டத்தில் உரையாற்றிய ரேகா குப்தா, தசரா டெல்லிக்கு ஒரு மகிழ்ச்சியான நாள் என்றும், அது ராவணனை வென்ற ராமரின் வெற்றியை மட்டுமல்ல, தீமையின் மீது நன்மையின் வெற்றியையும் குறிக்கிறது என்றும் இருள், ஆணவம், கோபம், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஊழல் ஆகிய வடிவங்களில் ராவணன் சமூகத்தில் தொடர்ந்து இருக்கிறான் என்றும் கூறினார்.

ராவணனின் உருவ பொம்மையை எரிப்பதற்காக அம்பை எய்வதற்கு முன்பு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ராமர், லட்சுமணன் மற்றும் சீதைக்கு பாரம்பரிய ஆரத்தியை நிகழ்த்தினார்.

ராமரின் குணங்கள்

தசரா வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி, ராமரின் குணங்களை மக்கள் உள்வாங்க வேண்டும் என்றும், அவரது கதை இயற்கையை மதிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், அனைவரையும் கவனித்துக் கொள்ளவும் மக்களைத் தூண்டுகிறது என்றும் அவர் கூறினார்.

துவாரகா ஸ்ரீ ராம் லீலாவில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதர் ஆகியோரின் 90 அடி உயர உருவ பொம்மைகள் இடம்பெற்றிருந்தன. இந்த ஆண்டு, ஏற்பாட்டாளர்கள் பாரம்பரிய விழாக்களை டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகளுடன் இணைத்திருந்தனர். நிகழ்ச்சிகள் சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. கொண்டாட்டங்களின் போது பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT