புற்றுநோய் மருந்துகள் 
தேசிய செய்திகள்

1,364 புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு: நாடு முழுவதும் இன்று முதல் அமல்!

நாடு முழுவதும் உள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 3,540.38 கோடி வரை மருத்துவச் செலவு குறையும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், 1,364 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட புதிய அதிகபட்ச சில்லறை விலை இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டாயமாக அமலுக்கு வந்துள்ளது.

விலை குறைப்பின் பின்னணி

மத்திய ரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), அத்தியாவசியப் பட்டியலில் இல்லாத 137 புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாகக் கட்டுப்படுத்தி சமீபத்தில் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், 85 மருந்து நிறுவனங்களின் 121 மூலக்கூறுகளைக் கொண்ட 1,364 மருந்து வகைகளின் விலையை அந்நிறுவனங்கள் குறைத்துள்ளன.

679 மருந்துகள் 50%-க்கும் மேல் குறைப்பு

விலை குறைக்கப்பட்டுள்ள 1,364 பிராண்டுகளில், 679 மருந்துகளின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 96.45 சதவீதம் வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால், நாடு முழுவதும் உள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 3,540.38 கோடி வரை மருத்துவச் செலவு குறையும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

முக்கிய மருந்துகளின் புதிய விலை நிலவரம்

இந்த விலை குறைப்பால் பல உயிர்காக்கும் மருந்துகளின் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.

• தியோடெபா (கீமோதெரபி ஊசி): ரூ.80,072-லிருந்து ரூ.7,150 ஆகக் குறைப்பு

• பெர்டுசுமாப் ரூ.94,951-லிருந்து ரூ.30,593 ஆகக் குறைப்பு.

• டசாடினிப் - (ரத்தப் புற்றுநோய்) ரூ.17,811-லிருந்து ரூ.1,808 ஆகக் குறைப்பு.

• அனஸ்ட்ரோசோல் ரூ.695-லிருந்து ரூ.73 ஆகக் குறைப்பு.

மருந்தகங்களுக்கு எச்சரிக்கை

இன்று முதல் நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனை மருந்தகங்களிலும் இந்தக் குறைக்கப்பட்ட புதிய எம்ஆர்பி விலையிலேயே மருந்துகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

புகார் எண்

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் மருந்துகளின் சரியான விலையை பார்மா சஹி தாம் செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் மருந்தகங்கள் மீது 1800-111-255 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது பார்மா ஜன் சமாதான் இணையதளத்திலோ புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT