பூசாரி அனில் சர்மா- முதலை 
தேசிய செய்திகள்

மழை பெய்ய வேண்டி முதலைக்கு பூஜை செய்த பூசாரி!

நல்ல மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி, முதலைக்கு பூக்கள் மற்றும் மஞ்சள், குங்குமம் தூவி பூசாரி அனில் சர்மா சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜைகளைச் செய்தார்.

ஹைதராபாத்,

தெலங்கானா மாநிலத்தில் மழை பெய்ய வேண்டி, நதிக்கரையில் படுத்திருந்த முதலைக்கு கோயில் பூசாரி ஒருவர் விசித்திரமான முறையில் சிறப்பு பூஜை செய்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

முதலைக்கு அர்ச்சனை

தெலங்கானா மாநிலம், ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள பீச்சுப்பள்ளி புஷ்கர காட் பகுதியில் கிருஷ்ணா ஆறு ஓடுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த ஆற்றில் இருந்து பிரம்மாண்ட முதலை ஒன்று வெளியேறி நதிக்கரைக்கு வந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்த நிலையில், அங்குள்ள ஆஞ்சநேயர் கோயில் பூசாரியான அனில் சர்மா என்பவர், அந்த முதலைக்கு அருகில் அச்சமின்றி சென்றார்.

மழை வேண்டி பிரார்த்தனை

பருவமழை சரியாக பெய்யாமல் போனதால், நல்ல மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி, அந்த முதலைக்கு பூக்கள் மற்றும் மஞ்சள், குங்குமம் தூவி பூசாரி அனில் சர்மா சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜைகளைச் செய்தார். மனிதர்கள் நடமாட்டம் இருந்தபோதிலும், அந்த முதலை பூசாரிக்கு எந்தவித ஆபத்தும் விளைவிக்காமல் அமைதியாக இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆற்றில் விடுடுக்கப்பட்ட முதலை

வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து முதலையை பத்திரமாக மீட்டு ஆற்றுக்குள் மீண்டும் விட்டனர். மழைக்காக விலங்குகளுக்கு திருமணம் செய்து வைக்கும் சடங்குகள் பரவலாக நடந்து வரும் நிலையில், முதலைக்கு பூஜை செய்த இந்த விசித்திர நிகழ்வின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.