திருவனந்தபுரம்,
கணவரின் உடலில் இருந்து தீய ஆவியை விரட்டுவதற்கான சடங்குகள் செய்வதாகக் கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரிக்கு, திருவனந்தபுரம் கோர்ட்டு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் உடலில் தீய ஆவி இருப்பதாகவும், அந்த ஆவியை விரட்ட சில சடங்குகளை செய்ய வேண்டும் எனவும் ராஜேஷ் என்ற பூசாரி கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண், பூசாரி ராஜேஷ் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணை ராஜேஷ் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன் பிறகும் பலமுறை அந்த பெண்ணை மிரட்டி ராஜேஷ் பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஷாஜஹான், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376-ன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ராஜேஷை குற்றவாளி என அறிவித்தார். இந்த வழக்கில் ராஜேஷுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.