தேசிய செய்திகள்

பிரதமர் மோடியும் , அமித்ஷாவும் தப்ப முடியாது: ராகுல் காந்தி

கேள்வி எழுப்பிய இளைஞர்களை பிரதமர் மோடி மன்னிப்பதாக கூறிய வீடியோ வெளியிட்டுள்ளார். தங்கள் அரசிடம் பொறுப்புக்கூறலை கேட்ட மக்களை பிரதமர் மன்னிப்பது எவ்வளவு அபத்தமானது? என்று ராகுல் காந்தி கேட்டுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் பிம்பம் அழிந்துவிட்டது. அதை இனி மீண்டும் கட்டமைக்க முடியாது. தங்களது நடவடிக்கைகளுக்கான விளைவுகளில் இருந்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா அல்லது எந்த அதிகாரியும் தப்பிக்க இந்திய இளைஞர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.

டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். தனியார் ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையில் ராகுல் காந்தி, மோடியையும் அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- 2026-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களுக்கு நியாயமான கல்வி முறை வேண்டும் என்றும், தேர்வு வினாத்தாள் கசிவுகளுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் மீது தாக்குதல்

அனைத்து சாதி, வர்க்கம், பிராந்தியம் மற்றும் மதங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். அரசியலமைப்பு வழங்கியுள்ள தங்களது உரிமைகளை அறிந்து, நீதிக்காக துணிச்சலுடன் அவர்கள் போராடினர். அமைதியான முறையில் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால், மாணவர்களின் குரலை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டது. ஆணிகள் பதிக்கப்பட்ட லத்திகளால் மாணவர்கள் தாக்கப்பட்டனர். ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது. பீகாரின் சிவான் பகுதியில் மாணவர்கள் மீது துப்பாக்கிகள், ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதங்களால் சுடப்பட்டனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சட்டவிரோதமான, அரசியலமைப்புக்கு எதிரான வன்முறைக்கு யார் உத்தரவிட்டது?” டெல்லியின் மையப்பகுதியில் நாடாளுமன்றத்துக்கு வெறும் 500 மீட்டர் தொலைவில் இந்த சம்பவங்கள் நடந்தது.

அமித்ஷா அனுமதி

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட டெல்லி போலீசாரும், விரைவு நடவடிக்கை படையினரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று, மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித்ஷா அனுமதி அளித்திருக்க வேண்டும். அப்படியானால் அவர் பொறுப்பேற்க வேண்டும். மற்றொன்று, சம்பவம் குறித்து அவருக்கு எதுவுமே தெரியாமல் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் அவர் முற்றிலும் திறமையற்றவர். எந்த சூழ்நிலையிலும் உள்துறை மந்திரி என்ற முறையில் இந்த சம்பவத்துக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். எனவே அவர் பதவி விலக வேண்டும்.

தப்பிக்க முடியாது

தங்களது சட்டப்பூர்வமான உரிமையை பயன்படுத்தி கேள்வி எழுப்பிய இளைஞர்களை பிரதமர் மோடி மன்னிப்பதாக கூறிய வீடியோ வெளியிட்டுள்ளார். தங்கள் அரசிடம் பொறுப்புக்கூறலை கேட்ட மக்களை பிரதமர் மன்னிப்பது எவ்வளவு அபத்தமானது?” நாடு முழுவதும் இளைஞர்கள் விழித்தெழுந்துவிட்டனர். பிரதமர் மோடியின் இமேஜ் அழிந்துவிட்டது. அதை இனி மீண்டும் கட்டமைக்க முடியாது. தங்களது நடவடிக்கைகளுக்கான விளைவுகளில் இருந்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா அல்லது எந்த அதிகாரியும் தப்பிக்க இந்திய இளைஞர்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.