புதுடெல்லி,
மத்திய அரசு நாடு முழுவதும் சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரெயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இந்த 75 ரெயில் நிலையங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய ரெயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்கள் முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டு, திறக்கப்பட உள்ளன.
* பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், அடுத்த 40 முதல் 50 ஆண்டுகால தேவையை நிறைவு செய்யும் வகையிலும் இந்த நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் நலனைக் கருதி புதிய எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட் வசதிகள் தாராளமாக நிறுவப்பட்டுள்ளன.
* மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயணிக்கும் வகையில் பிரத்யேக சாய்தளப் பாதைகள், பிரெய்லி வழித்தடங்கள் மற்றும் சிறப்பு கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* முன்பு 4.5 மீட்டராக இருந்த நடைமேடை மேம்பாலங்கள், பயணிகளின் பாதுகாப்பான நடமாட்டத்திற்காக 12 மீட்டர் வரை அகலப்படுத்தப்பட்டுள்ளன.
* ரெயில் நிலையங்களின் முகப்புகள் மற்றும் உட்புறச் சுவர்கள் அந்தந்தப் பகுதியின் பாரம்பரியக் கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
* ரெயில் நிலைய வளாகங்கள் வெறும் பயண இடமாக மட்டுமில்லாமல், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய 'சிட்டி சென்டர்களாக' மாற்றியமைக்கப்பட்டுள்ளன.