புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டைப் பிரதமர் மோடியும், ஐக்கிய அரபு அமீரக அதிபரும் உறுதிப்படுத்தினர். மேலும், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், முதலீடு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இது குறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது சகோதரரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் தொலைபேசி அழைப்பு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகளுக்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இருதரப்பு விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.