புதுடெல்லி,
இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரெயில் என்ஜினை தயாரிக்க கடந்த 2022-ம் ஆண்டு முயற்சிகள் தொடங்கியது. வடக்கு மண்டல ரெயில்வேக்காக சுமார் ரூ.140 கோடி செலவில் பணிகள் தொடங்கின. ரெயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்று வந்தது. பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து ரெயிலை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் 22-ந் தேதி ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதன்படி ரெயிலின் அறிமுகம் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மின்மயம் ஆக்கப்படாத வழித்தடமான அரியானா மாநிலத்தின் ஜிந்த் நகரில் இருந்து சோனிபட்டுக்கு இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்படுகிறது.