புதுடெல்லி,
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ். அந்நாட்டின் 50-ம் ஆண்டு தேசிய தினம் வருகிற 29-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.
இதற்காக 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை செஷல்ஸ் செல்ல உள்ளார். மேலும், இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு படைப் பிரிவினர் செஷல்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். பிரதமர் மோடி தனது பயணத்தின்போது செஷல்ஸ் அதிபர் பேட்ரிக்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும் செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு, கலாசாரம், மக்கள் தொடர்பு ஆகியவற்றில் இந்தியா-செஷல்ஸ் இடையே நீண்ட கால கூட்டுறவு உள்ளது. பிரதமர் மோடியின் தற்போதைய பயணம் இருநாடுகளிடையே வலுவான உறவை மீண்டும் உறுதி செய்வதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஷல்ஸ் நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடியை வரவேற்க அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். பிரதமர் மோடி செஷல்ஸ் நாட்டிற்கு மேற்கொள்ளும் 2-வது பயணம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி செஷல்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.