சென்னை,
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
11-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று மாலை 6.10 மணியளவில் காலமானர். திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த கோபாலபுரம் இல்லத்தில் 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், சிஐடி காலனியில் அதிகாலை 3 மணி வரையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகை
இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை காலை சென்னை வருகை தருகிறார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் வர உள்ளனர். அதேபோல், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் ஆகியோரும் நாளை கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை வருகை தர உள்ளனர்.