புதுடெல்லி,
இந்தியா மற்றும் போலந்தின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பொறாமைப்படுகின்றன என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் வந்தார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தினார்.
பிரதமர் மோடி உடனான செய்தியாளர் சந்திப்பில் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் கூறியதாவது:-
உலக அரங்கில் இந்தியா வகிக்கும் முக்கியப் பங்கை நாங்கள் மதிக்கிறோம், பாராட்டுகிறோம்.இந்தியாவும் தங்களுக்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
மோடி போன்ற ஒருவர் இந்தியா போன்ற வலிமையான நாட்டை வழிநடத்துவது எங்கள் அனைவருக்கும் நம்பிக்கையின் ஒளியாகத் திகழ்கிறது. உங்களை எனது நண்பர் என்று அழைப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
கடந்த 35 ஆண்டுகளில், நமது இரு நாடுகளும் வளர்ச்சி அடைந்துள்ளன. எந்தவித சந்தேகமோ தயக்கமோ இன்றி நேரடியாகக் கூறுகிறேன், இந்தியா மற்றும் போலந்தின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பொறாமைப்படுகின்றன என்றார்.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி போலந்துக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இந்தியா-போலந்து இருதரப்பு உறவுகள் ஒரு உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்டன. இரு நாடுகளும் 2024 ஆம் ஆண்டில் தங்களது 70 ஆண்டுகால தூதரக உறவுகளைக் கொண்டாடின.
பிரதமர் டஸ்க் உடன், நிதி மற்றும் பொருளாதாரத்துறை மந்திரி ஆண்ட்ரெஜ் டொமான்ஸ்கி மற்றும் குழுவினருடன் வந்துள்ளனர். போலந்து பிரதமர் இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.