பிரதமரின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு பாலஸ்தீனியர்களை கைவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
“மோடி அரசு பாலஸ்தீனியர்களின் நலனுக்கான தனது உறுதிப்பாடு குறித்து இழிவான மற்றும் பாசாங்குத்தனமான அறிக்கைகளை வெளியிடுகிறது.ஆனால் உண்மையில் இந்த அரசு அவர்களை கைவிட்டுவிட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் வெளியேற்றுவதும், இடம்பெயர்த்துவதும் தீவிரமடைந்து உலகளாவிய கண்டனத்தைப் பெற்றுள்ளது.
காசாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இரக்கமின்றி தொடர்கின்றன. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளன. மே 20, 1960 அன்று, நேரு காசாவுக்கு சென்று அங்கு ஐ.நா. அவசரகாலப் படையின் இந்தியப் படைப் பிரிவைச் சந்தித்தார். நவம்பர் 29, 1981 அன்று, பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையுடன் இந்தியா ஒரு நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. நவம்பர் 18, 1988 அன்று, இந்தியா பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரித்தது. அது ஒரு வித்தியாசமான சகாப்தம்.
காசாவை இடிபாடுகளாகவும் தூசியாகவும் மாற்றி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சட்டவிரோத குடியிருப்புகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டு வரும் இஸ்ரேல் பிரதமரை தற்போது பிரதமர் துணிச்சலுடன் அரவணைத்துக் கொண்டிருக்கிறார்.முழு உலகமும் தனது அன்பான நண்பர் நெதன்யாகுவை விமர்சிக்கும்போது, மோடி தார்மீக கோழைத்தனத்தைக் காட்டுகிறார்.”இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில் கூறியதாவது:“பிரதமர் மோடி இஸ்ரேலிய பாராளுமன்றம் நெசட்டில் உரையாற்றும் போது, காசாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் இனப்படுகொலை குறித்து நீதி கோருவார் என்று நம்புகிறேன்.சுதந்திர நாடான இந்தியா, தனது வரலாறு முழுவதும் நியாயத்தின் பக்கமே நின்றுள்ளது.” இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.