தேசிய செய்திகள்

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் - பிரியங்கா காந்தி

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, இந்தியா கேட் முன்பு திடீரென்று பிரியங்கா காந்தி 2 மணி நேரம் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் பிரியங்கா பேசுகையில் கூறியதாவது:

ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது? என்பதற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும். யாருடைய அரசாங்கம் மாணவர்களை தாக்கியது? என்று விளக்கம் அளிக்க வேண்டும். இந்த அரசாங்கம் அரசியலமைப்பை தாக்கி உள்ளது. இது தேசத்தின் ஆன்மா மீதான தாக்குதல் ஆகும். சட்டத்தை எதிர்ப்பது மாணவர்களின் உரிமை. அவர்களுக்காக நான் போராடுவேன். நானும் ஒரு தாய். பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து மாணவர்களை வெளியே இழுத்து எறிந்தது மிக கொடுமையானது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகள் மீது இந்த அரசாங்கம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. மற்றதையெல்லாம் பற்றி பேசும் பிரதமர், அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ., சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி ஏன் பேசவில்லை? இந்த அரசாங்கத்துக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து போராடுவார்கள் இவ்வாறு அவர் கூறினார்.