தேசிய செய்திகள்

பிரியங்கா காந்தி கைது: டெல்லி காவல்துறையில் பெண் காவலர்களே இல்லையா? - காங்கிரஸ் சரமாரி கேள்வி

அமித்ஷாவின் காவல்துறை இன்று ஜனநாயகத்தை மிதித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி, தொண்டர்களுடன் இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரியங்கா காந்தி

போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன், கர்நாடக முதல்-மந்திரி டிகே சிவகுமார், பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி சரஞ்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குண்டுக்கட்டாக கைது

பிரதமர் வீடு அருகே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், பிரதமரின் வீட்டை முற்றுகையிடும் வகையில் பேரணி செல்ல முயன்றதால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரைக் காவல் துறையினர் கைது செய்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரிடம் கடுமையாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் அவர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக வாகனங்களில் ஏற்றினர்.

அமித்ஷாவின் காவல்துறை

இந்நிலையில் காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

• டெல்லி காவல்துறையில் பெண் காவலர்கள் இல்லையா?

• ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை ஆண் காவலர் ஒருவர் வலுக்கட்டாயமாக பேருந்தில் தள்ளி ஏற்றுவது சரியா?

அமித்ஷாவின் காவல்துறை இன்று ஜனநாயகத்தை மிதித்தது மட்டுமல்லாமல், பெண்களின் கண்ணியத்திற்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையின் அனைத்து எல்லைகளையும் மீறியுள்ளது.

வெட்கப்பட வேண்டும்

நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் காட்டப்படும் இத்தகைய மோசமான நடத்தையை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் வெட்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.