புதுடெல்லி,
ரூ.2 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் கோடி செலவில், முப்படைகளுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றில் 82 சதவீத பொருட்கள். உள்நாட்டு தொழில்துறையினரிடம் இருந்து வாங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவத்துக்கு அதிக நகர்வுத்திறன் கொண்ட வாகனங்கள், தானியங்கி பீரங்கி அமைப்புகள், இலகுரக பன்முக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள், குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆளில்லா வான்வழி அமைப்பை எதிர்கொள்ளும் சாதனம், இதர ஆளில்லா வான்வழி அமைப்பு, கண்காணிப்பு ஆளில்லா வான்வழி வாகனங்கள், ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் தாக்குதல் சாதனம், நீண்டதூர காமிகாஸ் டிரோன் அமைப்பு ஆகியவை வாங்கப்படுகின்றன.
இந்திய கடற்படைக்கு எதிரி ஏவுகணைகளை திசைதிருப்பும் அமைப்பு மற்றும் முக்கிய கடற்படை தளவாடங்கள் வாங்கப்படுகின்றன. இந்திய விமானப்படைக்கு ஹெலிகாப்டர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்கள் ஆகியவை வாங்கப்படுகின்றன.