4 பேர் கைது 
தேசிய செய்திகள்

யூடியூப் பார்த்து கள்ள நோட்டு தயாரிப்பு: நொய்டாவில் 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

பொதுமக்களிடம் ரூ.2 லட்சம் அசல் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக ரூ.5 லட்சம் மதிப்பிலான போலி நோட்டுகளை தருவதாகக் கூறி ஏமாற்ற முயன்றது போலீசாருக்கு தெரியவந்தது.

லக்னோ,

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கள்ள நோட்டுகளைத் தயாரிக்க கற்றுக்கொண்டு, அவற்றை சந்தையில் புழக்கத்தில் விட முயன்ற 3 கல்லூரி மாணவர்கள் உட்பட4 பேரை நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர்.

ரகசிய தகவல்

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் கள்ள நோட்டுகள் அச்சிடப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நொய்டாவின் 'நாலெட்ஜ் பார்க்' காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்ட்லி புஸ்தா பகுதி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ1.84 லட்சம் போலி தாள்கள் பறிமுதல்

சந்தேகத்திற்கிடமான காரில் வந்த 4 பேரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வந்த காரில் ரூ1.84 லட்சம் மதிப்புள்ள 920 போலி 200 ரூபாய் தாள்கள், ரூ.1,000 அசல் ரொக்கம் மற்றும் எண் பலகை இல்லாத ஒரு சொகுசு கார் ஆகியவை இருந்தன. இவை அனைத்துயும் பறிமுதல் செய்த போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

சிறையில் தீட்டப்பட்ட திட்டம்

போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அர்ஜுன் சிங் (வயது 22), சஷாங்க் குப்தா (பி.காம் இறுதி ஆண்டு), சாந்தனு சிங் (பிஏஎல்எல்பி இரண்டாம் ஆண்டு) மற்றும் வைபவ் சுக்லா (பிசிஏ இறுதி ஆண்டு) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கும்பலின் தலைவனான அர்ஜுன் சிங், கடந்த 2024-ம் ஆண்டு அயோத்தி சிறையில் இருந்தபோது மற்றொரு கைதியுடன் சேர்ந்து கள்ள நோட்டு தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

4 பேர் கைது

அர்ஜுன் சிங் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பிறகு, கல்லூரி மாணவர்களான தனது நண்பர்களை சேர்த்துக் கொண்டு, யூடியூப் மூலம் கள்ள நோட்டுகளை அச்சிடும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு இந்த சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்களிடம் ரூ.2 லட்சம் அசல் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக ரூ.5 லட்சம் மதிப்பிலான போலி நோட்டுகளை தருவதாகக் கூறி ஏமாற்ற முயன்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT