இந்தியாவில் 2070-ம் ஆண்டில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாலும், மொத்த மக்கள் தொகையில் இந்துக்களின் சதவீதம் குறையும் என்றும், முஸ்லிம்களின் சதவீதம் அதிகரிக்கும் என்றும் பியூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம், 2020 முதல் 2070-ம் ஆண்டு வரையிலான உலக மதங்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் மதவாரியான மக்கள் தொகை மாற்றங்கள் குறித்தும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2020-ம் ஆண்டு மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 79.4 சதவீதமாக இருந்தனர். இது 2070-ம் ஆண்டில் 75.8 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் இந்துக்களே பெரும்பான்மையாகத் தொடர்ந்து இருப்பார்கள்.
அதேபோல், 2020-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 15.2 சதவீதமாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 2070-ம் ஆண்டில் 19.6 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2070-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 33.4 கோடியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது உலகிலேயே அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பிடிக்கும். பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கும்.
முஸ்லிம் மக்களின் சராசரி வயது குறைவாக இருப்பதும், இந்துக்களுடன் ஒப்பிடும்போது குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதுமே இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.இந்தியாவில் இரு மதத்தினரிடையேயும் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த சில தசாப்தங்களாகக் குறைந்து வந்தாலும், இரு பிரிவினருக்கும் இடையே இந்த வேறுபாடு நீடிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் 2070-ம் ஆண்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 360 கோடியைத் தாண்டும் என்றும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் பியூ ஆய்வு மையம் கணித்துள்ளது.