தேசிய செய்திகள்

ஆட்குறைப்பில் ஈடுபடும் பிரபல அமெரிக்க நிறுவனம்: இந்திய ஊழியர்களுக்கும் பாதிப்பு

இந்தியாவில் பெங்களூருவில் உள்ள குவால்காம் அலுவலகத்தில் கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கியதாக கூறப்படுகிறது.

பெங்களூரு,

அமெரிக்காவை சேர்ந்த சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் , இந்தியாவில் தனது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சுமார் 1,000 பேர் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய அளவில் தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஆட்குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் தொடங்கிய ஆட்குறைப்பு

இந்தியாவில் பெங்களூருவில் உள்ள குவால்காம் அலுவலகத்தில் கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதில் மூத்த பொறியாளர்கள் மற்றும் நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் குவால்காம் நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். பெங்களூரு மட்டுமின்றி சென்னை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ளன. மொத்த ஊழியர்களில் 5 முதல் 6 சதவீதம் பேர் வரை இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்களுக்கு எவ்வளவு இழப்பீடு?

ஆட்குறைப்பால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்தை இழப்பீடாக வழங்க நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நிறுவனத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், பணியில் இருந்து விலகுவதற்கான ஆவணங்களில் 2 அல்லது 3 நாட்களுக்குள் கையெழுத்திடும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விவரங்கள் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில் வெளியாகியுள்ளன. இழப்பீடு தொடர்பான விவரங்களை குவால்காம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

SCROLL FOR NEXT