தேசிய செய்திகள்

பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுக்கு ஆளான டெல்லி போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

மத்திய உள்விவகார அமைச்சகம், இந்த பதவிகளை சீரான முறையில் நிரப்பிய பின்னர், இந்த தற்காலிக பதவிக்கான ஏற்பாடுகள் முடிவடைந்து விடும்.

புதுடெல்லி

பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறல் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான டெல்லி போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் பதவி விலகக்கோரி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரபரப்பு குற்றச்சாட்டு

சமீபத்தில், மராட்டியத்தின் மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று, ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின்போது, டெல்லி போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்று பெண் பத்திரிகையாளர்கள் 3 பேர் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அத்துமீறல்

இந்த போராட்டத்தில் அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் நேஹா போரா, உறுப்பினர் யோகேந்திரா யாதவ் மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட 150 பேர் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

எனினும், கைது நடவடிக்கையுடன் இந்த நிகழ்வு நின்று விடவில்லை. அதற்கு மேலாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட 3 பெண் பத்திரிகையாளர்களிடம் போலீசார் அத்துமீறியுள்ளனர். இந்த 3 பெண் பத்திரிகையாளர்களின் புகார் தொடர்பாக புதுடெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பல மணிநேரம்

எனினும், பெண் பத்திரிகையாளர் ஒருவர் கூறும்போது, பார்லிமெண்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு வெளியே பல மணிநேரம் அமர்ந்து இருந்தேன். எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வலியுறுத்தினேன். ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை என்றார்.

இந்த கொடூர சம்பவத்திற்கு இந்திய பிரஸ் கிளப்பும் கண்டனம் தெரிவித்து உள்ளது. போராட்ட செய்தியை சேகரிக்கும் பணியில் இருந்த பெண் பத்திரிகையாளர்களை போலீசார் நடத்திய விதம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த புகார் மீது, டெல்லி போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டது. தலைநகர் டெல்லியில் நடந்த இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

பதவி உயர்வு

இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான 3 போலீசாரில் டெல்லி காவல் துறையின் உதவி ஆணையாளர் விவேக் பகத்தும் ஒருவர். இந்நிலையில், அவருக்கு கூடுதல் துணை ஆணையாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், இது தற்காலிக அடிப்படையில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

மொத்தம் 12 அதிகாரிகளுக்கு இந்த தற்காலிக அடிப்படையிலான கூடுதல் டி.சி.பி. பதவிக்கான பணி வழங்கப்படுகிறது. எனினும், முழு அதிகாரத்துடன் செயல்படுவதற்கான அங்கீகாரம் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. மத்திய உள்விவகார அமைச்சகம், இந்த பதவிகளை சீரான முறையில் நிரப்பிய பின்னர், இந்த தற்காலிக பதவிக்கான ஏற்பாடுகள் முடிவடைந்து விடும்.

இந்த தற்காலிக பதவிக்காக அவர்களுக்கு கூடுதல் சம்பளமோ அல்லது கூடுதல் படிகளோ வழங்கப்படாது. உத்தரவின்படி, எந்த காரணமுமின்றி பதவி உயர்வு ரத்தும் கூட செய்யப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றது.

SCROLL FOR NEXT