கிரேட்டர் நொய்டா
உத்தர பிரதேசத்தில் நூடுல்சில் தந்தை விஷம் கலந்ததில் ஒரே குடும்பத்தின் 5 பேர் பலியாகி இருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா அருகே உள்ள நக்லா ஸ்ரீபதம் கிராமத்தில் வசித்து வந்தவர் மகேஷ் (வயது 37). இவரது மனைவி லலிதா (வயது 35). இந்த தம்பதிக்கு, மிஷ்டி (வயது 7) என்ற மகளும், லட்டு (வயது 11), சக்ஷத் (வயது 3) என்ற 2 மகன்களும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் 5 பேரும் உயிரிழந்து கிடந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி மகேசின் தாய் கூறும்போது, 5 பேரும் நேற்று இரவு நூடுல்ஸ், தேநீர் சாப்பிட்டனர் என்றார். இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் உணவுப்பாதுகாப்பு துறையைச்சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மாதிரிகளை சேகரித்தனர்.
சம்பவம் பற்றி கிரேட்டர் நொய்டா டி.சி.பி. ஷ்ரவன் குமார் சிங் கூறும்போது, அவர்களுடைய உடல்கள் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன் அறிக்கைகள் மற்றும் தடயவியல் ஆய்வுகளின் முடிவுகளுக்கு பிறகே விசயம் பற்றி தெரியவரும். அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
எனினும் அக்கம்பக்கத்தினர் கூறிய விசயங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அவர்கள் கூறும்போது, மகேஷின் தாய்தான் நூடுல்ஸ் சமைத்து தந்துள்ளார். இரவில் மகேஷின் 3 குழந்தைகளும் தூங்கிய பின்னர், அவருக்கும், அவருடைய தாய்க்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தன்னுடைய மகளுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டேன் என்று தாய் கூறியுள்ளார். உங்களை இந்த வீட்டில் வாழ விடமாட்டேன். வீட்டை விட்டு வெளியேறுங்கள் என சத்தம் போட்டார்.
அவர்கள் எல்லா நாளும் சண்டை போட்டு கொண்டே இருந்தனர். இந்த விசயத்தில் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால், அவர்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டனரா? என்றும் விசாரிக்கப்படுகிறது.
இந்த சூழலில், உணவு கெட்டு போனதற்கான அறிகுறியோ அல்லது, உணவு நஞ்சானதற்கான அறிகுறியோ இல்லை. அதற்கு பதிலாக உணவில் விஷம் கலக்கப்பட்டிருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி உணவு பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சிங் கூறும்போது, சம்பவ பகுதிகளில் காலாவதியான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தியோ அல்லது வயிற்றுப்போக்கோ ஏற்பட்டதற்கான தகவல் இல்லை. உணவு நஞ்சாகி இருக்குமென்றால், இந்த அறிகுறிகள் இருந்திருக்கும் என்றார்.
எனினும், ஒரு குழந்தையின் வாயில் இருந்து நுரை வந்தது என உள்ளூர்வாசிகள் தெரிவித்து உள்ளனர். இந்த விசயத்தில் நடந்த விசாரணையின்படி, நூடுல்சில் மகேஷ் விஷம் கலந்திருக்கிறார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கேற்ப அவருடைய செல்போனில், இரண்டு சகோதரிகளையும் மற்றொரு உறவினரையும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.