தேசிய செய்திகள்

வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்; பிரதமர் மோடி அறிவுரை

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாதம் தோறும், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அந்த வகையில், 134-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி இன்று பேசினார். மோடி பேசியதாவது:

இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பான செயல்பாடுகள் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் சாதனைகள் புதிய அளவுகோல்களை உருவாக்குவதோடு, அடுத்த தலைமுறை வீரர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளன. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அண்மையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சம்மேளனப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் நான்கு தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. குரிந்தர்வீர் சிங், விஷால் டி.கே., தேஜஸ்வின் சங்கர், தேவ் மீனா மற்றும் குல்தீப் குமார் ஆகியோர் தத்தமது பிரிவுகளில் புதிய சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவர்களின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தேசிய சாதனை மூன்று முறை முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . குரிந்தர்வீர் சிங் மற்றும் அனிமேஷ் குஜூர் ஆகியோரின் சாதனைகள் இந்திய தடகளத்தின் வளர்ந்து வரும் வலிமையை வெளிப்படுத்துகின்றன” என்றார்.

அதிகரிக்கும் வெப்பம்

தொடர்ந்து நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து வருவது பற்றி பேசிய மோடி கூறியதாவது: வெப்பம் அதிகரித்துவருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிப்பது, தேவையற்ற நேரங்களில் வெயிலில் செல்வதை தவிர்ப்பது மற்றும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளைத் தடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்” என்றார்.

தமிழர்கள் மகிழ்ச்சி

மேலும் நெதர்லாந்தில் சோழர் கால செப்பேடுகள் மீட்கப்பட்டது பற்றி பேசிய மோடி, “ சோழ பேரரசின் முழுமையான வரலாறு, கலாசாரம் எண்ணி பெருமை கொள்கிறோம். விரைவில் நெதர்லாந்தில் இருந்து சோழர் கால செப்பேடுகள் கொண்டு வரப்பட உள்ளன. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது என்பதை அறிந்து வியந்தேன்.” என்றார்.