கொச்சி
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக கொச்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) சார்பிலும் மும்பை மற்றும் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் சூழலில், அதுவரை எந்த போராட்டமும் இல்லை என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக கேரளாவின் கொச்சி நகரில், வரும் 7-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இன்று அறிவித்து உள்ளது.
இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியாகி உள்ள செய்தியில், ஜனநாயகம் பாதுகாப்போம், எஸ்.ஐ.ஆரை ரத்து செய்க. எங்களுடன் கொச்சி ராஜேந்திர திடலில், வருகிற 7-ந்தேதி மாலை 4 மணியளவில் இணைந்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘கொச்சியில் ஜந்தர் மந்தர்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போராட்டத்தில் அபிஜீத் திப்கே கலந்து கொள்கிறார். அவருடன் அக்கட்சியின் தெற்கு மண்டல தலைவர் விஜய் மல்லாங்கி மற்றும் தேசிய செயலாளர் ஆப்ரீன் நவாஸ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்ட பின்னர், அந்த கட்சியின் தலைவர்களான திப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகியோர் மீண்டும் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்டனர். அவர்களில் திப்கே விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அந்த கட்சியின் முதல் நகர்வாக இது பார்க்கப்படுகிறது.