தேசிய செய்திகள்

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி கொச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையில் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

கொச்சி,

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கேரள மாநிலம் கொச்சியில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர். பணிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பிரகாஷ் ராஜ் தலைமையில் பேரணி

இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மெரைன் டிரைவ் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பேரணி நடைபெற்றது.

நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெரோம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் ராஜேந்திர மைதானத்தில் சிஜேபி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

விசாரணை நடத்த வலியுறுத்தல்

இந்தப் போராட்டத்தின்போது, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

டெல்லியிலும் போராட்டம்

முன்னதாக, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி நிர்வாகிகள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT