மும்பை:
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய புத்தகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியினர் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோனியா காந்தி எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் 201 மற்றும் 443-வது பக்கங்களில் வீர சாவர்க்கர் மற்றும் இந்துத்துவா கொள்கை குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சிறைத் தண்டனைகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டபோது, சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் கருணை மனுக்களை எழுதியதாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் சிவசேனா கட்சியினர் செய்தியாளர் சந்திப்பின்போது புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சஞ்சய் நிருபம், ஷைனா என்.சி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும், சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கி புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என்றும், அதுவரை மராட்டிய மாநிலத்தில் புத்தக விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும் பதிப்பகத்துக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேவின் நிலைப்பாடு என்ன என்றும் சிவசேனா தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் மராட்டிய அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது