தேசிய செய்திகள்

ராகவ் சத்தா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்- ஆம் ஆத்மி கட்சியினர் கைது

பா. ஜனதாவில் இணைந்த மாநிலங்களவை எம். பி. ராகவ் சத்தாவைக் கண்டித்து, கார் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் ராகவ் சத்தா, சந்தீப் பதக் உட்பட 7 பேர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தனர். இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கட்சி மாறிய ராகவ் சத் தாவைக் கண்டித்து, மும்பை கார் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். மும்பை ஆம் ஆத்மி தலைவர் பிரீத்தி சர்மா மேனன் தலைமையில் திரண்ட தொண்டர்கள், ராகவ் சத்தாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். "துரோகி ராகவ் சத்தா", "பா.ஜனதாவின் தரகர்" என முழக்கமிட்டு வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

தகவலறிந்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம் ஆத்மி மும்பை செயல் தலைவர் ரூபன் மஸ்காரன்ஹாஸ் மற்றும் சுமித்ரா ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து கார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.