தேசிய செய்திகள்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று போராட்டம் : டெல்லியில் பலத்த பாதுகாப்பு

இந்த போராட்டத்திற்கு இதுவரை அனுமதி பெறப்படவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது சொன்ன கருத்துகளின் பின்னணியில், அபிஜீத் திப்கே என்பவரால் இன்ஸ்டா பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'என்ற பக்கத்தைத் தொடங்கினார். அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனைப் பின்தொடரத் தொடங்கினர்.

ஒருகட்டத்தில், பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அது விஞ்சியது. இதனால், மத்திய அரசுக்கு அதற்கு தடை விதித்தது. எனினும், மீண்டும் அதே பெயரில் ஒரு புதுப்பக்கம் தொடங்கப்பட்டது. தவிர, அந்தப் பக்கமும் இணையத்தில் வேகம்பிடித்து வருகிறது.

போராட்டம் அறிவிப்பு

சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி”, இந்திய கல்வி முறையின் தோல்விகளுக்கு எதிராக டெல்லியில் நடத்தவுள்ள போராட்டத்திற்கு முன்னதாக, தனது அமைப்பை விரிவுபடுத்த மூன்று புதிய செய்தித் தொடர்பாளர்களை நியமித்தது.

இதன்படி, புலனாய்வு பத்திரிகையாளர் சவுரவ் தாஸ் தலைமை செய்தித் தொடர்பாளராகவும், திரைப்பட இயக்குநர் விஜேதா தஹியா மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் செய்தித் தொடர்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

அனுமதி பெறப்படவில்லை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகல் செய்ய வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போராட்டத்திற்கு இதுவரை அனுமதி பெறப்படவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

பலத்த பாதுகாப்பு

மேலும், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் பதற்றமான பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாவும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.